இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீசுவதாக தீர்மானித்தார். இதை தொடர்ந்து பேட்டிங் செய்வதற்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக ஆடிய முகமது ஆபீஸ் 52 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் போட்டியில் விளையாடிய ஹைதர் அலி 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் முன்னணி வீரரான ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆக டேவிட் மலனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் மூயின் அலி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனினும் இங்கிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி மூன்றாவது டி20 போட்டியை வென்றது. பாகிஸ்தான் அணி சார்பில் ஆப்ரிடி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடிய முஹம்மது ஆபீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.