ஐபிஎல் குறித்து முக்கிய முடிவுகள்… இன்று நடைபெறுகின்றது முக்கிய ஆய்வுக்கூட்டம்

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு தேவையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆலோசிக்க ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அனைத்து அணி நிர்வாகத்தின் இடையேயான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. 

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. வீரர்களின் பாதுகாப்பு, போட்டி நடைபெற உள்ள நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய ஐபிஎல் நிர்வாகக் கூட்டம் இன்று கூட உள்ளது.

இன்று மதியம் தொடங்கும் இக்கூட்டத்தில் முதலில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் வீரர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனை, வீரர்களை தனிமைப்படுத்துதல், போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இரண்டாவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணி நிர்வாகத்திடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொள்ளும் என்றும் கூட்டத்தின் இறுதியில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியின் விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு வீரரும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு  முன் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற உடன் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டுமென்றும் விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வீரர்கள் தங்களது குடும்பத்தை அழைத்துச் செல்லலாம் ஆனால் அவர்களின் பாதுகாப்பை அணி நிர்வாகமே கவனிக்கும் என்றும் கூறப்படுகின்றது. மொத்தமாக ஐபிஎல் சார்பில் 1200 நபர்களுக்கு மிகாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவேண்டும் என்ற அறிவிப்பும் வெளியாகும் என்று கருதப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய தலைவர் உஸ்மான் தெரிவிக்கையில், ஐபிஎல் போட்டிகளை காண 30 முதல் 50 % வரை ரசிகர்களை அனுமதிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவிற்கு சம்மதிக்கவில்லை என்றும் ஒவ்வொரு வீரர்களின் உடல்நிலை மிகவும் முக்கியம் என்றும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat