இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்னிங்சில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கடந்த ஜூலை 24ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்சிஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
122 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 226 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்து 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டுவர்ட் பிராட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ரோஸ்டன் சேஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.