கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடர் வரும் ஜூலை 30-ஆம் தேதி தொடக்கம்

கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் லீக் தொடர் வரும் ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போலவே ஒருநாள் போட்டிக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடர் தொடங்கப்படும் என்று கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் தொடங்க வேண்டிய இத்தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மூலமாக இத்தொடர் தொடங்க உள்ளன என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

13 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் என்றும் ஒவ்வொரு அணியும் நான்கு தொடர் உள்ளூரிலும் நான்கு தொடர் வெளியூரில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடரும் மூன்று போட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் மூன்று போட்டிகள் மேல் வேண்டுமானால் நடத்திக் கொள்ளலாம் ஆனால் முதல் மூன்று போட்டிகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு போட்டியை வெல்லும் அணிக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் சமன் அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டால் ஒவ்வொரு அணிக்கும் 5 புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உட்பட எட்டு அணிகள் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் மீதமிருக்கும் ஐந்து அணிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat