இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றே ஆகவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி நிச்சயம் பங்கேற்கும் என்றும் அந்தத் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இருப்பினும் அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி தான் அந்த தொடரை வெல்லும் என்று பல்வேறு கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து இருமுறை ஆஸ்திரேலிய மண்ணில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலகில் தலைசிறந்த அணி என்று நிரூபிக்க முடியும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 5 மாதங்களாக இந்திய அணி எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்காதது வீரர்களை சற்று சோர்வடைய செய்துள்ளதாகவும் எனவே வீரர்களை ஊக்கப்படுத்துமாறு விராட் கோலியிடம் கூறியதாகவும் தெரிவித்தார். இந்திய அணியை சேர்ந்த சில வீரர்கள் மட்டுமே தற்போது பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணியை சேர்ந்த அனைத்து வீரர்களும் தங்களது சொந்த மாநிலத்தில் இருப்பதால் அவர்களை ஒன்றிணைத்து பயிற்சி மேற்கொள்வது சற்று கடினமாக இருக்கின்றது. நிலைமை கட்டுக்குள் வந்தவுடன் பயிற்சி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
For more sports news click here and click here