ஐபிஎல் போட்டியா அல்லது டி20 உலகக்கோப்பையா…எது முக்கியம்?? – ஒரு அலசல்

கொரோனா பாதிப்பு காரணமாக உலகில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் இப்பொழுது தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு விளையாட்டு போட்டிகளும் விதிவிலக்கல்ல. குறிப்பாக இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள், ஐரோப்பிய கால்பந்து போட்டிகள், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகிய தனித்துவமிக்க தொடர்களும் நடக்க இருந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியும் ஐரோப்பா கால்பந்து போட்டியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்தாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அடுத்து வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு எந்த ஒரு விளையாட்டு போட்டிகளையும் நடத்துவது மிகவும் சிரமம் என்று கூறப்படுகின்றது. மேலும் ஒரு அணியில் உள்ள வீரர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளதால் அவர்களை ஒருங்கிணைத்து போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்வது இப்போது சாத்தியமில்லை என்று தோன்றுகின்றது. ஏற்கனவே ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அணுகியுள்ளன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரியிடம் கேட்டபொழுது இது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நமக்கு கிடைத்த தகவல் படி அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்போவதாக தெரிகிறது, காரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இடம்பெற்றுள்ளதாலும் போட்டிகள் ஒரே மாநிலத்தில் நடைபெற்றால் வீரர்களின் நோய் பரவல் பாதுகாப்பில் கவனம் செலுத்த இயலும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலேயே நடத்தமுடியும் என்று கூறுகின்றனர். இவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கும் பொழுது இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் அந்த நாட்டில் மெல்பன் மாநகரை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவிக்கையில், இந்த ஆண்டு உலககோப்பை போட்டியை நடத்தவே தாங்கள் முயல்வதாகவும் விரைவில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த மாதம் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியா மற்றும் வங்கதேச வீரர்களைத் தவிர அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களும் தங்களது பயிற்சியை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை நோக்கி அனைத்தும் நன்றாக செல்வதால் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்தால் ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமே….

இவ்வாறு ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடந்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது ஆனால் இது பல்வேறு கிரிக்கெட் வாரியத்திற்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகின்றது. இதுவே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்தால் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat